ஞாயிறு, 24 மார்ச், 2013

சித்தர்கள் மாயமாகும் சிற்றருவிப்பட்டி



வெள்ளிமலை

Photo :saravana



  தினமலர் :மார்ச் 23,2013



ஏகாந்தம்...  இந்த வார்த்தைக்குரிய தனிமையை, அது தரும்  இனிமையை அனுபவிக்க வேண்டுமா?  சிற்றருவிப்பட்டி தீர்த்தப் பகுதிக்கு செல்லலாம். சிற்றருவிப்பட்டி எங்கே இருக்குமோ என்று சிந்தித்து குழம்ப வேண்டாம்.

 நம்ம மதுரையில், கொட்டாம்பட்டி அருகே அ.வல்லாளப்பட்டி பஞ்சாயத்தில், வெள்ளிமலை அடிவாரத்தில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது, சிற்றருவிப்பட்டி. வெள்ளிமலைப்பட்டி மெயின் ரோட்டில் இருந்து தார்ரோடு விடைபெறுகிறது

அதன்பின் மூன்று கிலோ மீட்டர் தூரம் மண் ரோட்டில் செல்ல வேண்டும். 

நடந்து சென்றால் ஒரு பக்கம் பாதுகாக்கப்பட்ட காடு, மறுபுறம் இயற்கையை ரசிக்க செடி, கொடி, மரங்கள் காத்திருக்கின்றன.

 கார் பயணம் செய்வதற்கும் வழியிருக்கிறது. பாதையின் இடையிடையே நீர்வழித் தடத்தில் குறுக்கிடும் கூழாங்கற்கள் மின்னுகின்றன.

 ஆவாரை பூத்திருக்க... சாவாரை பார்த்ததுண்டா என்பர். 


பாதையின் இருபுறமும், ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் ஆவாரம் பூக்கள் பூத்து அதிசயம் சேர்த்தன.


சில்லென்று காற்று வீசும் போது, எலுமிச்சை புல்லின் மணம் நாசியை இதமாக தழுவிச் சென்றது.

சிற்றருவிப்பட்டி தீர்த்தத்தை நெருங்கும் போது, அமானுஷ்யமாக இருந்தது.

 மனித நடமாட்டத்தை முகர்ந்த குரங்குகள், எங்கிருந்தோ வந்து, ஏதாவது தருவார்களா என காத்திருந்தன.

 நூற்றாண்டைக் கடந்த மூன்று மா மரங்கள், ஆலமரத்தை விட பிரமாண்டமாய் படர்ந்திருந்தன.

 தீர்த்தம் வழிந்தோடும் இடத்தில், குளம் போல் வெட்டியிருந்தனர்.  வெள்ளி மலையாண்டி முருகன் கோயில் இருக்கிறது.

 கொளுத்தும் வெயிலிலும் சில்லென்று அருவி நீர், மெல்லியதாக வழிந்தோடியது.

எங்கள் தலைமுறை குடும்பம் தான் பூசாரியாக இருந்து வருகிறோம் என்கிறார் பெரியகருப்பன்.குழந்தைக்கு முதல் முடி எடுப்பதற்கு இங்கே தான் வருவோம். அறுவடை செய்து, முதல் படையல் எங்க சாமிக்கு வைப்போம். 

இதே கோயிலை, அ.வல்லாளப்பட்டி ஊருக்குள்ளே அமைத்திருக்கிறோம். வெள்ளி, செவ்வாய்க்கு அவ்வப்போது மக்கள் வந்து செல்கின்றனர்.

வாசனை திரவியங்களை மூடி வைத்தாலும், திறந்து வைத்தாலும் காற்று குடித்து விடும். சோதித்து பார்த்திருக்கிறோம்.

 படையல் சமைக்கும் போது, வேறு யாராவது உருவத்தில் சித்தர்கள் வந்து கேட்பர். கொடுத்த நிமிடத்தில் மாயமாக மறைந்து விடுவர்.

 சிலநேரம் கோயில் திண்டில் பெரியவர் உட்கார்ந்து பசிக்கிறது. ஏதாவது கொடுங்கள் என்று கேட்பார். 

ஏதாவது எடுத்து வருவதற்குள் காணாமல் போய் விடுவார்.

 இரவு நேரத்தில் காலடி ஓசை கேட்பதாக, முன்னோர்கள் சொல்வதுண்டு. 

சித்தர்கள் இங்கு வசிப்பது, பூர்வஜென்ம புண்ணியம்.

 மழைக்காலத்தில் அருவி முழுதும் நீர் வழிந்தோடும் அழகே அழகு என்கிறார் பெரியகருப்பன்.