திங்கள், 26 டிசம்பர், 2011

மயூர வாகன சேவனம்!







தினமணி : வெள்ளிமணி :23 Dec 2011 11:00:00 AM IST












பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் (1848-1929), முருகப்பெருமான் ஒருவனையே முழு முதற்கடவுளாக வழிபட்டவர். மக்கள், துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும், தோத்திரமாகவும் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் அருளியவர். 

இவை வேதம், உபநிடதம், ஆகமம், சைவ சமய சாத்திரம், தோத்திரம் முதலியவைகளின் நுட்பங்களைக் கொண்டவை. இவருடைய பாடல்கள் மந்திரசக்தி வாய்ந்தவை மட்டுமல்ல, முருகப் பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவை.



மயூரவாகன சேவனம்:
 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம், சென்னையில் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்தார்.

 உருத்ரோத்காரி ஆண்டு, மார்கழி மாதம், 12-ஆம் நாள் வியாழக்கிழமையன்று (27.12.1923) வடசென்னை, தம்புச் செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி பாம்பன் சுவாமியின் மீது மோதியதால் அவரின் இடக்கால் எலும்பு முறிந்தது. 

அதைக்கண்டு சுவாமி கலங்கவில்லை; மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்துவிட்டன என்றும், மீண்டும் பிறவித் துன்பம் வராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடியையே சிந்தித்திருந்தார்.



இந்த விபத்தைக் கண்ட சுவாமியின் அன்பர் ஒருவர் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். பாம்பன் சுவாமி 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பில்லாத உணவையே உண்பவர் என்பதாலும் அவரின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினர்.



அவர்கள் கூறியதை ஏற்காமல் பாம்பன் சுவாமி, முருகப்பெருமானையே சிந்தித்த வண்ணமாய் இருந்தார். சீடர்கள், 1891-ஆம் ஆண்டில் சுவாமி இயற்றிய சண்முகக் கவசத்தை தினந்தோறும் பாராயணம் செய்தார்கள். 

மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரவில் முருகப்பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை விரித்து, அழகிய வானை மறைத்திருப்பதையும், மற்றொரு மயில் அதனுடன் சேர்ந்து நடனமாடிய காட்சியையும் கண்டார். அக்காட்சி மறைவதைக் கண்டு, முருகப்பெருமானின் திருவருளைச் சிந்தித்து அழுதார்.



அவர் மனம் மகிழுமாறு செவ்வேட் பரமன் ஓர் இரவில் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் சுவாமி படுத்திருந்த படுக்கையில் படுத்திருந்தான். குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று அறிந்துகொண்டதும் அக்குழந்தை மறைந்துவிட்டது.



பிறகு, மருத்துவர்கள் ஆராய்ந்து, எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி அந்த மருத்துவமனை கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பு வருமாறு:



""பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11வது வார்டு (மன்றோ வார்டு) 11வது படுக்கையில் 27.12.1923 அன்று சேர்க்கப்பட்டிருந்தார். முருகப்பெருமான் திருவருளால் 11-ஆம் நாள் இரவு (6.1.1924) வளர்பிறை பிரதம திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலேயே பூரண குணம் பெற்றார். அந்நாள் "மயூர வாகன சேவன' விழாவாக ஒவ்வோராண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது''.



அவ்வகையில்÷மகிமை பொருந்திய "மயூரவாகன சேவன விழா' 88-ஆம் ஆண்டு விழாவாக 25.12.11 மற்றும் 26.12.11 தேதிகளில் சிறப்பாக மஹாதேஜோ மண்டல சபையால் பாம்பன் சுவாமியின் சமாதி நிலையத்தில் நடத்தப்படுகிறது. 

ஆண்டவன் அருள்பெற்ற அடியார்களின் பூஜையே ஆண்டவனுக்கு உகந்த - சிறந்த பூஜையாகும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறியதுபோல மயூரவாகன சேவனம் ஒரு மகத்தான சேவனம்! தொடர்ந்து நிகழ்த்தினால் துன்பங்கள் தொலைந்தோடும்!

வியாழன், 20 அக்டோபர், 2011

சித்தர் பாடல்களின் உள்ளடக்கம்



 பதிப்பிக்கப்படாத,தொகுக்கப்படாத
சித்தர்பாடல்கள் பலவும் பழம்பனைஓலைகளில்
இன்றும் எங்கோ நாம் கண்டுபிடிக்க காத்திருக்கின்றன
என்றே தோன்றுகின்றது.

சித்தர்கள் தங்கள் பாடல்களை
எளிமையான,மிக எளிமையான
நாட்டு தமிழில் ,நாட்டுப்பாடல்களை ஒத்த
நடையில் நமக்களித்தனர்

எனினும் அவர்கள்தம் எளிமையான
பாடல்கள் வழியாக தாங்கள்
சொல்ல நினைத்த விஷயங்களை
குறிஈடுகளாகவே
சொல்லிவைத்தார்கள்.

மேலோட்டமான பார்வையில்
இப்பாடல்கள் எளிமையாக
இருப்பினும் அவைஉண்மையில்
 எளிதில் புரிந்துகொள்ளமுடியாத
அறிந்துகொள்ளமுடியாத
சித்த,சித்தாந்தங்களை உள்ளடக்கமாக
கொண்டவை.

இந்த சித்த சித்தாந்தங்கள்
சித்தர்களால், நாம்
எளிதில் புரிந்துகொள்ளமுடியாதபடி, 
அறிந்துகொள்ளமுடியாதபடி
சித்தர் பாடல்களில் பொதிந்து
வைக்கப்பட்டன.

-ரத்னம்ஜி



புதன், 19 அக்டோபர், 2011

சித்தர் பாடல்கள்





சித்தர்கள் பற்றி ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட
நூல்கள் ஏதுமில்லை.அப்படியே  இருப்பினும்
அவைகளனைத்தும் நம்பதகுந்ததான,
 ஆதரபூர்வமான,முழுமையான நூல்களாக
 இல்லை .

நம்பதகுந்ததான, ஆதரபூர்வமான,முழுமையான 
சித்தர் நூல்களே இல்லை என்பதே
இன்றைக்கு நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான
சித்தர் பற்றிய நூல்கள் புற்றீசல் என
புறப்பட காரணமானது .


சித்தர்கள் அன்றும்,இன்றும்,என்றும்
வினாக்களுக்கும் வியப்புகளுக்கும்
உட்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

தங்கள் பாடல்களையே தம் அளப்பரிய
சொத்துக்களாக நம்மிடயே விட்டுசென்றார்கள்.

அந்த சித்தர்கள் பாடல்களே இன்று நம்மக்கு
சித்தர்களை யார்  என்று அடையாளம் காட்டுகிறது

சித்தர் பாடல்கள் அனைத்துமே செவி வழி பாடல்களாகவே
வழி வழியாகவே காக்கப்பட்டு வாய்மொழி பாடல்களாகவே
நிலை நிறுத்தப்பட்டு, பின் ஓலைசுவடிகளில் எழுதப்பட்டு
தொகுக்கப்பட்டன.

இன்றுநாம் சித்தர் பாடல்கள் என்று நாம்
கொண்டாடும் பாடல்கள் அனைத்துமே
பல்வேறு காலகட்டங்களில்
 எழுதப்பட்டு ,சித்தர்கள் அல்லாத
பலரால் தொகுக்கப்பட்டவையே.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையமும்
சென்னை அரசினர்  கீழ்த்திசை சுவடி நூல் நிலையமும்
சென்னை கன்னிமாரா நூல் நிலையமும்
சென்னை பல்கலைகழக நூல்  நிலையமும்
இன்றளவும் நமக்கென இந்த சித்தர்
செல்வங்களை காத்து காப்பற்றிவருகின்றன.

சற்றேறக்குறைய ஐந்து தொகுதிகளாக
பதிக்கப்பட்ட சித்தர் பாடல்களே
நமக்கு அவர்தம் நெறிகளையும்
வாழ்நாள் குறிப்புகளையும்
கோடிட்டு காட்டுகின்றன.


-ரத்னம்ஜி

வியாழன், 13 அக்டோபர், 2011

சித்தர்கள் பல பிரிவினர்



விருப்பு வெறுப்பின்றி  வெகுளியின்றி
அழுக்காறு காமமின்றி பொய்யின்றி
 மெய்யையே வாய்மையால் வளர்த்து
அஷ்டமாசித்திகளை பெற்று
சரியை  கிரியை யோகம் ஞானம்
எனும் நெறி நின்று சித்தத்தை
ஆளும் முறை கண்டோரே சித்தர்கள்.

சித்தர்கள் பல பிரிவினர்
ஞான சித்தர்கள்
நாத சித்தர்கள்
ராஜேஸ்வர சித்தர்கள்
வாலை சித்தர்கள்
என்று பல பிரிவுகளில்
பல்லாயிரக்கணக்கில்
எண்ணற்ற சித்தர்கள்
வாழ்ந்த நன்னாடே   நம்நாடு.

-ரத்னம்ஜி

வியாழன், 6 அக்டோபர், 2011

சித்தர்கள்- ஒரு முன்னோட்டம்-2





சித்தர்கள் என்போரே மாண்புடை மாந்தர்கள்
சித்தத்தை தன்வயப்படுத்தி மோனத்தில்
நின்றோர்களே சித்தர்கள்.

நல் இயலை மாந்தர்தம் வாழ்வியலில் புகுத்தி
அவர்தம் அன்றாட வாழ்வில் மேம்பாடு
காண தமை வருத்தி வாழ்ந்தோர்தாம் சித்தர்கள்.

சித்தர் பாடல்கள் மிக எளிமையான வார்த்தைகளால்
வார்க்கப்படிருந்தாலும் அவற்றின் பொருள்கள்
என்றும் புரிய புதிர்களாகவே நிலை கண்டுள்ளன.

இவர்கள் தங்கள் சித்தத்தையே தங்களுக்குள்
நிலை கொண்ட பரம்பொருளாக கண்டார்கள்.

-ரத்னம்ஜி









செவ்வாய், 4 அக்டோபர், 2011

சித்தர்கள்- ஒரு முன்னோட்டம்




சித்தர்கள் எனும் பதமே தமிழின் தனிச்சொத்து.
ஆங்கிலம் உட்பட்ட ஏனய பிற மொழிகளில்
சித்தர்கள் எனும் சொல்லிற்கு ஈடான சொல் ஏதுமில்லை.

சித்தர்கள் சாதி மத பேதமற்ற தமிழ் மூத்த தமிழ் மூதறிவாளர்கள்.
பிற்காலத்தில் தமிழர்களாலேயே தள்ளி வைக்கப்பட்ட தமிழறிவாளர்கள்.

தமிழுக்கென தமிழர்களால் தொகுக்கப்பட்ட தமிழ் திருமுறை
திருமறை தொகுப்புக்களில் அவர்களுக்கு இடமில்லை.

பிறமொழிக்கலப்பில்லா செந்தமிழில் எழுதப்பட்ட
சித்தர்தம் செம்மொழிக்கு சிறப்பே அதன்
பொருளடக்கமும் எளிய சொல்லட்சியுமே.

--_ரத்னம்ஜி