ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

நரேனுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி!







dn :08 February 2013 04:54 PM IST
ஆன்மீகப் பயிற்சிகளுக்கான முதல் படியாக அமைவது மந்திர தீட்சை. பொதுவாக குரு ஒருவர் சீடனின் தகுதிக்கேற்ப ஒரு மந்திரத்தை உபதேசிப்பதன் மூலம் தீட்சை அளிக்கிறார். அதாவது ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டுகிறார். 
இந்த மந்திரம் ஸித்த மந்திரமாக இருக்க வேண்டும். ஸித்த மந்திரம் என்றால் விழிப்புற்ற மந்திரம் என்று பொருள். அதாவது ஒரு குரு அந்த மந்திரத்தை ஜபித்து, அதன்மூலம், அந்த மந்திரத்திற்குரிய தெய்வத்தின் அருள் பெற்றவராக இருக்க வேண்டும்.
அத்தகைய குரு அளிக்கின்ற தீட்சை மட்டுமே பலன் அளிக்கக் கூடியது. ஏனெனில் மந்திரத்துடன் அந்த மந்திரத்தை ஜபிப்பதற்கான ஆற்றலையும் அவர் அளிக்கிறார்.
 அதனால் தான் நூல்களில் படித்து, அந்த மந்திரங்களை ஜபிக்கக் கூமாது. குருமூலம் பெற்ற மந்திரத்தையே ஜபிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திர தீட்சைக்கென்று குறிப்பிட்ட நியதிகளும் நிபந்தனைகளும் உள்ளன.
ஆனால் நிறைநிலை பெற்ற குரு நியதிகளையெல்லாம் மீறி, தாம் பிரும்பும் விதத்தில் தீட்சை அளிப்பதுண்டு. ஆன்மீக ஆற்றலைச் சீடனிடம் பாய்ச்சுவதே தீட்சையின் நோக்கம். 
அதனை அவர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் சாதிப்பார்கள். இத்தகைய தீட்சையைத் தந்திர சாஸ்திரங்கள் சாம்பவி தீட்சை என்கின்றன. ஸ்ரீராமகிருஷ்ணர் நரேந்திரருக்கு இத்தகைய தீட்சையை அளித்தார்.
ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணர் அதர்லால் சேன் என்ற பக்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது பார்வை நரேந்திரரின் மீது விழுந்தது.
 உடனே எழுந்து நின்று சமாதியில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே தமது கால்களை நீட்டி நரேந்திரரின் முழங்காலின் மீது வைத்தார். அப்படியே நீண்ட நேரம் நின்றார்.
 அவருக்குப் புறவுணர்வு சிறிதும் இல்லை. கண்கள் நிலைகுத்தி நின்றன. சில நேரங்களில் நரேந்திரரின் நெஞ்சைத் தொடுவார். இவ்வாறு பலவிதமாக நரேந்திரருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்கினார்.