வெள்ளி, 13 டிசம்பர், 2013

போகர் ஏழாயிரத்தில் மூளை அறுவை சிகிச்சை

போகர் ஏழாயிரத்தில் மூளை அறுவை சிகிச்சை
சங்கரரமசாமி  28 நவம்பர் 2013


போகர் ஏழாயிரம்’ என்றொரு நூல். சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படுவது. அந்த நூலைப் பற்றிய அறிமுகம், விமரிசனம் முதலியவற்றை இன்னொரு முறை சொல்கிறேன்.
ஏழாயிரம் பாடல்கள் அல்லவா! விமரிசனம் என்பது சும்மா இல்லையே!   அந்த ஏழாயிரத்தில் எவ்வளவோ அபூர்வமான விஷயங்கள்     ஒளிந்திருக்கும். போகரின் வழக்கம் ஒரு தினுசு. ஏதாவது ஒரு பொருளைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டே வருவார். திடீரென்று வேறு ஏதாவது ஒரு சிறு வரலாறு, சம்பவம், கதை     அதில் குறிக்கிடும்.
வரிசையாகப் படித்துக்கொண்டே வந்தால்தான் அந்த மாதிரி நடுப்பட்ட இடைப்பட்ட விஷயங்களெல்லாம் தட்டுப்படும். தட்டுப்பட்டாலும் கூட அந்த பாடல் என்ன சொல்கிறது என்பது எளிதில் மட்டுப்படாது.
பல விஷயங்களைக் குறித்து வைக்காமல் விட்டு விட்டேன். அவற்றையெல்லாம்  இப்போது தேடுவது என்பது மிகச் சிரமமான செயல். நினைவில் அந்த விஷயம் இருக்கும். ஆனால் அது எங்கிருந்து வந்தது  என்பதோ அதன் தொடர்புகளோ தெரியாமலிருக்கும். ஒரு     சிறு லாரி நிறைய அடைத்துக்கொள்ளும் அளவுக்குக் எழுதிவைத்த குறிப்புகள் இப்போது இருக்கின்றன என்றால் எழுதாமல் விடுபட்டுப்போனது இன்னும் எவ்வளவு இருக்குமோ?     நான் வாழ்க்கையில் மிகவும் regret செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. .
போகர் ஏழாயிரத்தில் உள்ள விந்தையான குறிப்பொன்றுடன் முதலில் தொடங்குவோம்.
இந்தக் கதை எப்போது நடந்தது எனது தெரியாது. நடந்த இடம் கபாட புரம். அதாவது இரண்டாவது தமிழ்ச்சங்கம் நடந்த சமயம். அச்சங்கத்தில் அகத்தியருடைய சீடராகிய ‘திரணதூமாக்கினிமுனி‘ என்னும் தொல்காப்பியரும் இருந்தார். (நான் போகர் ஏழாயிரத்திலுள்ள கதையைத்தான் சொல்கிறேன். ‘திரணதூமாக்கினி இது அது’, என்று என்னைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கப்படாது.)
தொல்காப்பியருக்குத் தலைவலி. பத்தாண்டு காலம் இடைவிடாது தொடர்ந்து     தலைவலி. எத்தனையோ வைத்தியர்கள் முயன்றும்கூட அந்தத் தலைவலி தீரவில்லை. அகத்தியரை நினைத்தார்கள்.
வரும் வந்தார். அவருடைய ஞானதிருஷ்டியில் பார்த்தார். காரணம் புலப்பட்டு     விட்டது.
அகத்தியர்
ஹட யோகியரிடம் ஒரு பயிற்சியுண்டு. தண்ணீரை ஒரு நாசித் துவாரத்தில் ஏற்றி கபாலத்தில் உள்ள அறைகளிலெல்லாம் செலுத்திவிட்டு இன்னொரு நாசித்துவாரத்தின்     வழியாக வெளியே விடுவார்கள்.
இந்தப் பயிற்சிக்கு ஓர் உபயோகத்தை வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது புரையேறும். அவ்வாறு புரையேறும்போது தும்மல் வரும்.
 அப்போது உணவுத் துகள்கள் நாசியின் உட்புறத்தில் மேலே சென்றுவிடும். மசாலா கிசாலா சமாச்சாரமாக இருந்தால் அதுவேறு தொல்லை படுத்தும். அதனை flush out செய்து வெளியேற்றுவதற்காக வலது நாசியின் மூலம் தண்ணீரை இழுத்து மேலே கொண்டு     சென்று சற்று வைத்திருந்துவிட்டு, அதனை வேகமாக வெளியேற்றிவிடுவேன். மூன்று முறையாவது இவ்வாறு செய்துவிடுவேன். சரியாகிவிடும் – இதுவரை. (பயிற்சியற்றவர்கள் இதனைச் செய்து பார்க்கவேண்டாம். ஆபத்து.
தொல்காப்பியர்
தொல்காப்பியருக்கு    அந்த மாதிரி பயிற்சியெல்லாம்  அத்துப்படி.  ஒரு முறை அவர் நாசியின் வழியாக இழுத்த தண்ணீரில் தேரை முட்டை இருந்திருக்கிறது. ஆலவிதையை ‘சிறுமீன் சினையினும் நுண்ணிதேயாயினும்’ என்று பழைய நீதி நூல் சொல்கிறது. தேரை முட்டை அதனினும் நுண்ணிது. ஆகவே நாசித்துவாரத்தின் வழியாக மூளைக்குச் சென்றுவிட்டது.
இப்போது இருக்கும் அனாட்டமி நூலின்படி ஏதாவது ஸைனஸிற்குள் நுழையலாம்
என்று சொல்லலாம்.
    ஆனால் ஹடயோகியர்களின் கபாலம் எப்படியிருக்கும் என்று சொல்லமுடியாது.
ஏதாவது பயிற்சியின் மூலம் எதையாவது வாசலைத் திறந்துவைத்திருப்பார்கள்.
   “சிக்குள்ள வாசல் திறந்ததடி; சிலம்பொலிதானும்தான் கேட்டதடி”,   என்று காணாக்கண் கேளாச்செவி மூலம் காணமுடியாக் காட்சி, கேட்க முடியா ஓசையை உணர்ந்துகொண்டு பாடிக்கொண்டிருப்பார்கள்.
ந்த முட்டையிலிருந்து தவளை வெளிவந்து பெரியதாகிவிட்டது. அதுதான் அப்படியரு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. ம்முடைய ஞானதிருஷ்டியினால் இதனை உணர்ந்துகொண்ட அகத்தியர், அறுவை சிகிச்சை செய்து தேரையை எடுக்கத் தீர்மானித்தார். அதனைப் பாண்டிய மன்னனின் பிரத்தியேக மருத்துவசாலையில் செய்தார்கள். தொல்காப்பியரின் தலையில் கபாலத்தைத் திறந்து     மூளையைக் கீறிப் பார்த்தார்கள். அங்கே ஒரு தேரை மூளையைப் பற்றியவாறு இருந்தது.
எப்படிக் கபாலத்துக்குள்ளிருந்துகொண்டு பத்தாண்டுகள் ஜீவித்திருந்தது?”……என்று என்னிடம் கேட்பதில் பிரயோஜனமில்லை. அந்த சித்தை அறியவேண்டுமானால் ‘கல்லினுள் தேரை’யையும் ‘கருப்பை உயிரை’யும்தான் கேட்கவேண்டும். அவற்றுக்குப் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் தான் அந்த காலத்துள் தேரைக்கும் கொடுத்து வாழ்வித்திருக்கவேண்டும்.
அந்தத் தேரையை அகத்தியர் குறடால் எடுக்க முயன்றார். அதனை பார்த்துக்கொண்டிருந்த சீடர்களில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தார். அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும்.
ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார். அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது.  தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள்.
யோசிதமாக உத்தியைச் சொன்ன பொன்னரங்கனாரை அகத்தியர் பாராட்டினார். அத்துடன் அவருக்குச் சிறப்புப் பெயராக ‘தேரையர்’ என்னும் பெயரும் ஏற்பட்டது. தேரையர் பெயரால் பல வைத்திய நூல்கள் இருக்கின்றன.
சரி.  போகர் ஏழாயிரத்துக்கு வருவோம்:
இட்டாரே சங்கத்துப் புலவர் எல்லாம்
எழிலான திரணாக்கிய முனிவர் நோயை
சட்டமுடன் தச வருட காலமையா
தலைவலியும் சன்னியுடன் அதிகமுண்டு
தொட்டவொரு பண்டிதங்கள் மெத்த உண்டு
துரைராஜ சுந்தர்க்கு இலக்கோ இல்லை
திட்டமுடன் தங்களது பண்டிதங்கள்
திறமுடனே செய்வதற்கு வருந்திட்டாரே
திரணாக்கிய முனிவர் – தொல்காப்பியர்
பண்டிதங்கள் – மருத்துவ சிகிச்சைகள்; வைத்தியர்களைப் பண்டிதர்கள் என்று அழைப்பார்கள். தஞ்சை அபிரஹாம் பண்டிதர் ஒரு பெரும் மருத்துவர். கருணானந்தர் வைத்தியசாலை என்ற பெயரில் நிறுவியிருந்தார். பலவகையான மருந்துகளைத் தயாரித்தனர். இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியிருக்கிறேன்.
வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
“போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?”
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக