பாடகச்சேரி.
கோயில் நகரம் என்று கொண்டாடப்படும் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது பாடகச்சேரி. வலங்கைமானிலிருந்து 5 கி.மீ., ஆலங்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவு.
"பைரவ சித்தர்' என்று அறியப்பட்ட மகான் பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த திருத்தலம் இது. பல திருக்கோயில்களுக்கு திருப்பணியைச் செய்தவர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள்.
அவரது மடத்தில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் அன்னதானம் விமர்சையாக நடக்கிறது.
பாடகச்சேரியில் உள்ள முக்கியமான ஆலயங்கள் பெருமாள் கோவிலும், ஈஸ்வரன் கோவிலும்! ஆனால், பல வருடங்களாக இந்தக் கோவில் தெய்வ மூர்த்தங்கள் ஓலைக்குடிசையில் வாசம் செய்தனர். இதைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் இந்த தெய்வ மூர்த்தங்களுக்கு நல்ல ஆலயம் கட்டி குடமுழுக்கு செய்ய ஆசை கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள்.
அதற்காக மிகவும் முயன்றார். ஆனால்,அவருடைய முயற்சி அந்தக் காலத்தில் கைகூடவில்லை. தற்போது பாடகச்சேரி கிராமவாசிகள், பக்தப் பெருமக்கள், நல்லுள்ளம் கொண்ட ஆன்மிகச் செம்மல்கள் ஒன்றுகூடி இந்தத் திருப்பணியை நிறைவு செய்துள்ளனர்.
இங்கே எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு "கண்டு உளம் மகிழ்ந்த பெருமாள்' என்பது திருநாமம். அவர் திருமேனியைக் காணும் நொடிப்பொழுதே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது திண்ணம்.
காட்டிலே சீதையைத் தேடி அலைந்து திரிந்த ராமபிரான், சீதையின் கொலுசைக் கண்டு மகிழ்ந்த இடம் இது என்றும், பாடகம் (கொலுசு) என்று சொல்லப்படும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டதால் இத்திருத்தலம் பாடகச்சேரி என்று அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்தி!
இங்கே சிவபெருமான் தவம் மேற்கொண்டபோது புற்று சூழ்ந்தது. பார்வதி தேவி அதை ரகசியமாக அறிந்து பாதுகாத்து பூஜித்தாள். சிவபெருமான் மகிழ்ந்து பார்வதி தேவிக்கும், பூஜைக்குப் பால் சொரிந்த பசுவுக்கும் தரிசனம் கொடுத்ததால் பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றாராம்.
இன்றும் அந்தப் புற்றினை இங்கே காணலாம். இங்குள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி, பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.
. மேலும் விவரம் அறிய: 98400 53289/ 99528 48340
- சுப்பிரமணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக